சுங்கச்சாவடி அலுவலகம் மீது பூந்தொட்டியை வீசி, கம்ப்யூட்டரை உடைத்த வாலிபர்
நிறுத்தி விட்டு சென்ற காரை தர மறுத்ததால், மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அலுவலகம் மீது பூந்தொட்டியை வீசி, கம்ப்யூட்டரை உடைத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருமங்கலம்,
நிறுத்தி விட்டு சென்ற காரை தர மறுத்ததால், மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அலுவலகம் மீது பூந்தொட்டியை வீசி, கம்ப்யூட்டரை உடைத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
காரை நிறுத்தி விட்டு சென்றார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சவுடார்பட்டி மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருடைய மகன் அரவிந்த்குமார் (வயது 30). இவர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டி வருகிறார். கடந்த 3 தினங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து திருமங்கலம் வந்துள்ளார். கப்பலூர் சுங்கச்சாவடி பகுதிக்கு வந்த போது வசூல் மையத்தில் சுங்கக்கட்டணம் கட்டுமாறு ஊழியர்கள் கேட்டுள்ளனர். தான் உள்ளூர் வாகன ஓட்டி என்பதால் தன்னிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அவர் கூறி உள்ளார். இதனால் அவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே ஆத்திரம் அடைந்த அவர் தனது காரை சுங்கச்சாவடி பகுதியிலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றார்.
அலுவலகம் மீது பூந்தொட்டி வீச்சு
இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் காரை மெல்ல அங்கிருந்து அப்புறப்படுத்தி சுங்கச்சாவடி அருகே நிறுத்தி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது காரை அரவிந்த்குமார் எடுக்க வந்தபோது சுங்கச்சாவடி ஊழியர்கள், திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும், எனவே அங்கு சென்று தகவல் தெரிவித்துவிட்டு காரை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி காரை தர மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அரவிந்த்குமார் சுங்கச்சாவடி ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு இருந்த பூந்தொட்டியை எடுத்து சுங்கச்சாவடி அலுவலக ஜன்னல் மீது வீசினார். இதில் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. மேலும் அலுவலகத்தின் உள்ளே இருந்த கம்ப்யூட்டரை அடித்து நொறுக்கி உள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் வருவதை அறிந்த அரவிந்த்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து கப்பலூர் சுங்கச்சாவடி மேலாளர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் அரவிந்த்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அவரை தேடி வருகின்றனர்.