தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் விஷம் குடிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு
தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் விஷம் குடிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைவாசல்:
தொகுப்பு வீடு
தலைவாசல் அருகே உள்ள புளியங்குச்சியை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 30). இவர் அரசு ஒதுக்கீடு செய்யும் தொகுப்பு வீடு கட்டுவதற்காக தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அவர் பட்டா நிலத்தில் இடம் கொடுத்தால் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக தெரிவித்து இருந்தார்.
இதை ஏற்க மறுத்த மணிகண்டன் தலைவாசல் தாலுகா அலுவலகம் வந்துள்ளார். அங்கு தாசில்தார் வரதராஜனிடம் புறம்போக்கு நிலம் அல்லது வண்டிப்பாதை நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்றும், அதற்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
விஷம் குடிக்க முயற்சி
இதனிடையே தகவல் அறிந்த தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாலுகா அலுவலகத்துக்கு வந்து மணிகண்டனிடம் விளக்கமாக எடுத்து கூறியுள்ளார். அதிகாரிகள் கூறியதை ஏற்க மறுத்த மணிகண்டன் தாலுகா அலுவலகம் வளாகத்தில் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை (பூச்சி மருந்து) குடிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த வருவாய் துறை ஊழியர்கள் அதை தட்டி விட்டுள்ளனர். இதனால் அந்த மருந்து உடல் முழுவதும் கொட்டியது. இதனிடையே மணிகண்டன் திடீரென்று தாலுகா அலுவலகத்திலேயே மயங்கி விழுந்தார். மேலும் பூச்சி மருந்தின் நாற்றம் தாலுகா அலுவலகம் முழுவதும் வீசியது. இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மணிகண்டனை வருவாய்த்துறை ஊழியர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.