கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தீக்குளிக்க முயற்சி
நாகர்கோவில் கீழஆசாரிபள்ளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆன்றனி ஜோசப்சிங் (வயது 33). இவருடைய தம்பி தனது நண்பர்களுடன் வந்து ஆன்றனி ஜோசப் சிங்கிடமும், அவருடைய தாயாரிடமும் அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆன்றனி ஜோசப்சிங் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் வாய்மொழியாக புகார் கொடுத்ததாக தெரிகிறது.
எழுத்து பூர்வமாக புகார் கொடுக்காததால் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆன்றனி ஜோசப் சிங் நேற்று பிற்பகலில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் தான் கொண்டு வந்திருந்த 300 மில்லி அளவு கொண்ட பாட்டிலில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிகிறது.
போலீசார் தடுத்தனர்
இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச்சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது தான் கொடுத்த புகார்மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக கூறினார். மேலும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து நேசமணிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா கொடுத்த புகாரின்பேரில் ஆன்றனி ஜோசப்சிங் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று பிற்பகலில் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.