குடும்ப தகராறில் வாலிபர் அடித்துக்கொலை


குடும்ப தகராறில் வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே குடும்ப தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

விழுப்புரம்

திண்டிவனம்

குடும்ப பிரச்சினை

திண்டிவனம் அருகே உள்ள தீவனூரைச் சேர்ந்தவர் இருதயராஜ் மகன் ஜெகன்(வயது 26). இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் கணவனை கோபித்துக்கொண்டு மகாலட்சுமி அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றார்.

அடித்துக்கொலை

இந்த நிலையில் மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக ஜெகன் மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது இவருக்கும், அங்கிருந்த மகாலட்சுமியின் அக்கா கணவரும், தொழிலாளியுமான அன்புராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அன்புராஜ் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ஜெகனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ஜெகன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அன்புராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

போலீசார் விசாரணை

இது பற்றிய தகவல் அறிந்த ரோஷணை போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த ஜெகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அன்புராஜை வலைவீசி தேடி வருகிறார்கள். குடும்ப தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story