கடலூரில் 600 போதை மாத்திரைகளுடன் வாலிபர் சிக்கினார்ஆன்லைனில் வாங்கி ஐதராபாத்தில் இருந்து கூரியர் மூலம் வரவழைத்தது அம்பலம்
ஐதராபாத்தில் இருந்து ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கி கூரியர் மூலம் வரவழைத்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், ஆன்லைன் மூலம் போதை மாத்திரை வாங்குவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், டெல்டா பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் நேற்று திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
மேலும் திருப்பாதிரிப்புலியூர் சங்கரநாயுடு தெருவில் உள்ள கூரியர் அலுவலகத்திற்கு யாரேனும் சந்தேகப்படும்படியாக வந்து செல்கிறார்களா? எனவும் கண்காணித்தனர். அப்போது 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் கூரியர் அலுவலகத்திற்கு வந்து ஒரு பெரிய பார்சலை வாங்கிக்கொண்டு புறப்பட தயாராகினர்.
கூரியர் மூலம் வரவழைப்பு
இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும், அவர்களில் ஒருவர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். ஒருவர் மட்டும் பிடிபட்டார். இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், போதை தரக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை ஐதராபாத்தில் இருந்து ஆன்லைனில் வாங்கி கூரியர் மூலமாக வரவழைத்தது தெரியவந்தது.
இதையடுத்து டெல்டா பிரிவு போலீசார், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 600 மாத்திரைகளையும், பிடிபட்ட வாலிபரையும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார், பிடிபட்ட வாலிபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர் கடலூர் பாதிரிக்குப்பத்தை சேர்ந்த கவியரசன் என்பதும், தப்பி ஓடியது கடலூர் முதுநகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார், போதை மாத்திரை வாங்கியதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
வலி நிவாரணி
இதுகுறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரை வலிக்கு உதவும் மருந்து ஆகும். மிதமானது முதல் கடுமையான வலிக்கு நிவாரணம் அளிக்க இந்த மருந்து டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவர் பரிந்துரைத்தபடி மருந்து அளவுகளை எடுக்க வேண்டும். கூடுதல் மாத்திரைகளை சாப்பிடும் போது, அது போதை பொருளாக மாறும். சிலர் வலி நிவாரணிக்கு பயன்படுத்தப்படும் இந்த மாத்திரையை, போதைக்காகவும் பயன்படுத்துகின்றனர் என்றார்.