கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை


கள்ளக்காதல் விவகாரத்தில்  வாலிபர் வெட்டிக்கொலை
x

நெல்லை அருகே பட்டப்பகலில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே தாழையூத்தில் இருந்து குறிச்சிகுளம் செல்லும் வழியில் ஒரு பாலம் உள்ளது. நேற்று பகல் 12 மணி அளவில் அந்த பாலத்தின் கீழ் வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தாழையூத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ், தாழையூத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, பிணமாக கிடந்தவர் குறிச்சிகுளம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் வெள்ளியப்பன் என்ற துரை (வயது 30) என்பது ெதரியவந்தது. இவருக்கு திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணை அவர் குஜராத்திற்கு அழைத்து சென்றுவிட்டார். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் தனது மனைவியை காணவில்லை என்று நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் தனது தந்தையுடன் சென்றுவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மீண்டும் வெள்ளியப்பனுடன் சென்று விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், வெள்ளியப்பனை கொலை செய்ய திட்டம் போட்டு அதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் குறிச்சிகுளத்தில் நேற்று முன்தினம் கோவில் திருவிழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வெள்ளியப்பன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற வெள்ளியப்பனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணின் தந்தை மூக்கனை (60) கைது செய்தனர். மேலும் உறவினர்களான விளாகம் பகுதியைச் சேர்ந்த பிரமுத்து என்ற மணிகண்டன் (22), நாகராஜன் (20), கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (19), பூல்பாண்டி (22), சிதம்பரம்நகரைச் சேர்ந்த பேச்சிராஜா (23), செல்வகணபதி (23) ஆகியோரையும் நேற்று இரவில் அதிரடியாக கைது செய்தனர். கைதான 7 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்களை போலீசார் விசாரணைக்கு பின்னரே அனுமதித்தனர். நெல்லை அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story