கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை
திருடிய இரும்பை விற்று பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி வாலிபரை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கம்மாபுரம்:
நெய்வேலி அருகே உள்ள தெற்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் மகன் ஆகாஷ்(வயது 22). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மகன் ஆகாஷ் (24) என்பவரும் நண்பர்கள்.
இருவரும் என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து இரும்பு பொருட்களை திருடி, அதனை கடைகளில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மது குடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
பணம் பிரிப்பதில் தகராறு
வழக்கம்போல் இன்று காலையிலும் இருவரும் என்.எல்.சி. சுரங்கத்திற்கு சென்று இரும்பு பொருட்களை திருடி வந்தனர். பின்னர் அதனை விற்று பணம் பெற்றனர். இந்த பணத்தை பிரிப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பணத்தில் மது வாங்கி இருவரும் குடித்தனர். போதை தலைக்கு ஏறியதும் பணம் பிரிப்பது தொடர்பாக இருவருக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கத்தியால் குத்தி கொலை
அதன்பிறகு சமாதானமான இருவரும் மதியம் 12.30 மணி அளவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பிரகாஷ் மகன் ஆகாஷ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ராஜ் மகன் ஆகாசின் மார்பில் குத்து விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர், நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நண்பர் கைது
இது பற்றி தகவல் அறிந்ததும் ஊ.மங்கலம் போலீசார் விரைந்து சென்று ரா.ஆகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பி.ஆகாசை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.