நண்பரிடம் கொடுத்த செல்போனை திருப்பி கேட்ட வாலிபர் சரமாரி குத்திக்கொலை
நண்பரிடம் கொடுத்த செல்போனை திருப்பி கேட்ட வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தேனி,
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (வயது 25). எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா. இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராஜா செல்போனை ஒண்டி வாங்கி சென்றார். அதன்பின்னர் செல்போனை யுவராஜா பலமுறை திருப்பி கேட்டார்.
ஆனால் அவர் செல்போனை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒண்டியிடம் பேசி தனது செல்போனை வாங்கி தருமாறு தனது நண்பரான வினோத் குமார் (24) என்பவரிடம் யுவராஜா கூறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னமனூர் நகராட்சி அலுவலகம் அருகே வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் இருந்தனர்.
கத்திக்குத்து
இதை அறிந்த யுவராஜா தனது செல்போனை வாங்கி தருமாறு வினோத்குமாரை அங்கு அழைத்து சென்றார். அங்கு செல்போன் வாங்கியது தொடர்பாக இருதரப்பினர் இடையே திடீர் மோதல் உண்டானது. இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வௌ்ளத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்தநிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வினோத்குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஒண்டி மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
உறவினர்கள் தர்ணா
இந்நிலையில் வினோத் குமார் உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.