வெயில் கொடுமையை சமாளிக்க தலையில் தண்ணீர் ஊற்றியபடி ஸ்கூட்டரில் சென்ற வாலிபர்


வெயில் கொடுமையை சமாளிக்க தலையில் தண்ணீர் ஊற்றியபடி ஸ்கூட்டரில் சென்ற வாலிபர்
x

தஞ்சையில், நேற்று 100.4 டிகிரி வெயில் பதிவானது. வெயில் கொடுமையை சமாளிக்க வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் வாளியை வைத்துக்கொண்டு அதில் இருந்து தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றியபடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து போலீசார் அந்த வாலிபருக்கு அபராதம் விதித்தனர்.

தஞ்சாவூர்


தஞ்சையில், நேற்று 100.4 டிகிரி வெயில் பதிவானது. வெயில் கொடுமையை சமாளிக்க வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் வாளியை வைத்துக்கொண்டு அதில் இருந்து தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றியபடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து போலீசார் அந்த வாலிபருக்கு அபராதம் விதித்தனர்.

வெயில் கொடுமை

தமிழகத்தில் வெயில் கடந்த மார்ச் மாதம் முதல் கொளுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அக்னி நட்சத்திர தொடக்க காலத்தில் வெயிலின் தாக்கம் இன்றி சில நாட்கள் மழை பெய்தது. அதன் பின்னர் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை அதிகபட்சமாக 102 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. நேற்று 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை காணப்பட்டது.

ஸ்கூட்டரில் தண்ணீர் வாளியுடன் சென்ற வாலிபர்

வெயில் கொடுமையில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்காக பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், நுங்கு, கூழ், மோர் போன்றவற்றை அதிக அளவில் வாங்கி பருகி வருகிறார்கள். வெயிலில் செல்வோர் தலையில் முக்காடு போட்டபடியும், குடைபிடித்தவாறும் சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் வெயில் கொடுமையை சமாளிக்க வாலிபர் ஒருவர் நேற்று ஸ்கூட்டரின் முன்பகுதியில் தண்ணீர் நிரம்பிய வாளியை வைத்துக்கொண்டு, வாகனத்தில் சென்றவாறே தண்ணீரை எடுத்து தனது தலையில் ஊற்றியபடி சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

சமூக வலைதளங்களில் வைரல்

தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளில் அவர் இது போன்று தலையில் தண்ணீர் ஊற்றியபடியே இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சென்றதையும், அதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து பயந்தபடியே சென்றதையும் அதில் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் இந்த வீடியோ பற்றிய தகவல் போலீசாரின் கவனத்திற்கு சென்றது.

தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதிப்பு

இதையடுத்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வீடியோ பதிவிட்டவர், இருசக்கர வாகனத்தில் குளித்து கொண்டே சென்றவர்களின் வாகன எண்களை வைத்து தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தார். உடனே அவர்களது செல்போன்களுக்கு குறுஞ்செய்தி சென்று சேர்ந்தது.

இருசக்கர வாகனத்தில் தலையில் தண்ணீரை ஊற்றியபடி சென்ற இடம் தஞ்சை மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் வாகன எண்களை வைத்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவர் தஞ்சை கீழவாசல் குறிச்சி வடக்குதெருவை சேர்ந்த அருணாசலம் (வயது 23), வீடியோ பதிவு செய்தவர் கீழவாசல் குறிச்சி தெற்குதெருவை சேர்ந்த பிரசன்னா (27) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் இனிமேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story