காதல் ஜோடியை தாக்கி சங்கிலி பறித்த வாலிபர் கைது
ஆம்பூர் அருகே காதல் ஜோடியை தாக்கி சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர் -வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பச்சகுப்பம் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இதன் அருகே முட்புதர்கள் வளர்ந்து அடர்ந்த காடுகள் போல் உள்ளது. இங்கு காதல் ஜோடிகள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு முட்புதருக்கு காதல் ஜோடிகள் வந்துள்ளனர். இதனைக் கண்ட 4 பேர் கொண்ட கும்பல் காதல் ஜோடிகளிடம் சென்று அவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்கள் மற்றும் 2 பவுன் சங்கிலியை பறித்தனர். பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து காதல் ஜோடிகள் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று போலீசார் காதல் ஜோடிகளிடம் செல்போன், நகை திருடிய பச்சகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.