பெண்ணை தாக்கிவிட்டு கத்தியுடன் கோவில் கோபுரத்தில் பதுங்கிய வாலிபர்


பெண்ணை தாக்கிவிட்டு கத்தியுடன் கோவில் கோபுரத்தில் பதுங்கிய வாலிபர்
x
தினத்தந்தி 23 July 2023 1:43 AM IST (Updated: 23 July 2023 4:42 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட, பெண்ணை தாக்கிவிட்டு கத்தியுடன் கோவில் கோபுரத்தில் பதுங்கி இருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில், பெண்ணை தாக்கிவிட்டு கத்தியுடன் கோவில் கோபுரத்தில் பதுங்கி இருந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வீட்டுக்குள் புகுந்த வாலிபர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி முத்துலட்சுமி(வயது 55). வீட்டில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மதியம் இவர் வீட்டில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டினுள் திடீரென மர்ம மனிதர் ஒருவர் புகுந்து வீட்டில் எரிந்து கொண்டிருந்த சமையல் கியாஸ் அடுப்பின் கியாஸ் வரும் குழாயை பிடுங்கி எறிந்துள்ளார்.

பெண்ணை தாக்கினார்

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி சத்தம் போட்டார். பின்னர் அந்த வாலிபரிடம், ஏன் திடீரென என் வீட்டுக்குள் புகுந்து கலாட்டா செய்கிறாய்? என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அருகில் கிடந்த விறகு கட்டையால் முத்துலட்சுமியை தாக்கி விட்டு முத்துலட்சுமி வீட்டில் உள்ள கத்தியை கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

கோவில் கோபுரத்தில் ஏறி பதுங்கினார்

வாலிபர் தாக்கியதில் வலி தாங்க முடியாத முத்துலட்சுமி கூச்சலிட்டவாறு அந்த வாலிபரை பிடியுங்கள் என அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கு திரளானோர் கூடினர்.

அவர்களில் சிலர் அந்த வாலிபரை பிடிப்பதற்காக அவரை விரட்டி சென்றனர். அங்கிருந்து தப்பி ஓடிய அந்த வாலிபர் கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஓட்டை உடைத்துக்கொண்டு கோபுரத்தில் ஏறி பதுங்கி கொண்டார்.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

அவரை விரட்டி சென்றவர்கள் இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கோவில் கோபுரத்தில் ஏறி அங்கு பதுங்கி இருந்த அந்த வாலிபரை மடக்கி பிடித்து கையில் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட சங்கேந்தி பகுதியை சேர்ந்த முருகையன் மகன் சிவசங்கர்(35) என்பதும், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.

மனநலம் பாதிப்பு

சற்று மனநலம் பாதித்த நிலையில் இருந்த சிவசங்கரை அவரது சகோதரி சந்திரா மற்றும் உறவினர்கள் சேர்ந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு அழைத்து சென்று விட்டு திருத்துறைப்பூண்டிக்கு திரும்பி வந்து உள்ளனர். அவ்வாறு வந்தபோது கும்பகோணம் பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து குதித்து ஓடியுள்ளார். உடனே அவரது சகோதரி சந்திரா மற்றும் உறவினர்கள் அவரை பிடிப்பதற்காக துரத்தி சென்ற உள்ளனர். அந்த நேரத்தில் அவர் முத்துலட்சுமி வீட்டில் புகுந்ததும், அப்போது முத்துலட்சுமி, சிவசங்கரை தட்டி கேட்டதால் அவரை தாக்கி விட்டு கையில் கத்தியோடு ஓடிச்சென்று கோவில் கோபுரத்தில் ஏறி ஒளிந்து கொண்டதும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story