மது போதையில் வீட்டை எரித்த வாலிபர்; பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை


மது போதையில் வீட்டை எரித்த வாலிபர்; பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை
x

அரியலூரில், மது போதையில் வீட்டை தீவைத்து எரித்த வாலிபரை அவரது பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

வீட்டிற்கு தீவைப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் சக்திதாசன் (வயது 20). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு மதுபோதையில் வீட்டிற்கு சென்ற சக்திதாசன் தனது பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் தனது கூரை வீட்டிற்கு தீவைத்தார். இதனை கண்டு பீதியடைந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இதையடுத்து மறுநாள் காலை சக்திதாசனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சக்திதாசன் அவர்கள் புதிதாக கட்டிக் கொண்டிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திதாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story