குரூப்-4 தேர்வுக்கு தாமதமாக வந்த வாலிபர் பள்ளியின் சுற்றுச்சுவர் ஏறி குதித்ததால் பரபரப்பு. ஹால்டிக்கெட் கிழிப்பு


குரூப்-4 தேர்வுக்கு தாமதமாக வந்த வாலிபர் பள்ளியின் சுற்றுச்சுவர் ஏறி குதித்ததால் பரபரப்பு. ஹால்டிக்கெட் கிழிப்பு
x

வேலூரில் குரூப்-4 தேர்வுக்கு தாமதமாக வந்த வாலிபர் பள்ளியின் சுற்றுச்சுவர் ஏறி குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூரில் குரூப்-4 தேர்வுக்கு தாமதமாக வந்த வாலிபர் பள்ளியின் சுற்றுச்சுவர் ஏறி குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குரூப்-4 தேர்வு

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடந்தது. தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எந்த காரணம் கொண்டும் தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் முககவசம் கட்டாயம் அணிந்து கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்.

தேர்வறைக்குள் பைகள், புத்தகங்கள், செல்போன், கால்குலேட்டர், மின்னணு கைக்கெடிகாரம் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல கூடாது என்று டி.என்.பி.எஸ்.சி. மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பள்ளிக்குள் குதித்த வாலிபர்

வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு கூடத்துக்கு காலை 9.20 மணியளவில் வாலிபர் குரூப்-4 தேர்வு எழுதுவதற்காக வந்தார். பள்ளியின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த வாலிபரை தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கவில்லை. அவர் உள்ளே செல்ல அனுமதிக்கும்படி போலீசாரிடம் கெஞ்சி கேட்டார். ஆனால் போலீசார் தேர்வு கூடத்துக்குள் செல்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்று கூறி வாலிபரை திரும்பி செல்லும்படி அறிவுறுத்தினர்.

அதனால் ஏமாற்றத்துக்கு உள்ளான வாலிபர் சிறிதுதூரம் நடந்து சென்று அங்கிருந்த சைக்கிள் உதவியுடன் சுற்றுச்சுவர் மீது ஏறி திடீரென பள்ளியின் உள்புறமாக குதித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஹால்டிக்கெட் கிழிப்பு

வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி தேர்வு கூடத்துக்கு பென்னாத்தூரை சேர்ந்த கணேசராஜ் என்பவர் தேர்வு எழுத தாதமதாக வந்தார். போலீசார் அவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் ஏமாற்றமும், ஆவேசமும் அடைந்த கணேசராஜ் பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் தேர்விற்கான ஹால்டிக்கெட்டை கிழித்து எறிந்து விட்டு ஆவேசமாக அங்கிருந்து சென்றார்.

இதேபோன்று பல்வேறு தேர்வு கூடங்களுக்கு 9 மணிக்கு பின்னர் தேர்வர்கள் பலர் வந்தனர். அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.


Next Story