சுற்றுலாப்பயணியை ஏமாற்றி வேன் திருடிய வாலிபர்


சுற்றுலாப்பயணியை ஏமாற்றி வேன் திருடிய வாலிபர்
x

கொடைக்கானலில், சுற்றுலாப்பயணியை ஏமாற்றி வேன் திருடிய வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல்

சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க கடந்த சில தினங்களாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி நேற்று காலை திண்டுக்கல் நகரை சேர்ந்த ஒருவர், தனது நண்பர்களுடன் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வேனை நிறுத்தினார். அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், வேன் உரிமையாளரிடம் கட்டணம் கேட்டார். மேலும் அதனை நகர்த்தி விடுவதற்கு வேன் சாவியையும் கேட்டார்.

வாகன நிறுத்தத்தில் பணிபுரியும் ஊழியர் என்று கருதிய உரிமையாளர், வேன் சாவியை அந்த வாலிபரிடம் கொடுத்து விட்டு அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட சென்று விட்டார். சிறிதுநேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, வாகன நிறுத்தத்தில் வேன் காணாமல் போய் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே சுற்றுலா வழிகாட்டிகளின் உதவியுடன் வேனின் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இந்தநிலையில் கொடைக்கானல் ஏரிச்சாலையில், வேனை நிறுத்தி விட்டு அந்த நபர் மாயமாகி விட்டார். இதுகுறித்த தகவல், சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனையடுத்து தனது நண்பர்கள், சுற்றுலா வழிகாட்டிகளுடன் அங்கு சென்ற உரிமையாளர் வேனை மீட்டார். பின்னர் அந்த வேன், போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக கொடைக்கானலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

------


Next Story