மது குடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
மது குடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கும்பகோணம் சாலையில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலம் அருகே இலையூர் கிராமத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவர் அவரது நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது வாகனத்தில் வந்த ஒரு வாலிபர், மது குடிப்பதற்கு பணம் கேட்டு கத்தியை காட்டி சூரியபிரகாஷை மிரட்டியுள்ளார். மேலும் பணம் தர மறுத்த சூரியபிரகாஷை தாக்கி, அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்து சென்றார். இதனால் சூரியபிரகாஷ் சத்தம் போட்டார். அதைக்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்த பஜருல்லா மகன் முகமது யாசிக் (20) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.