ஆற்றில் மூழ்கிய வாலிபர் சாவு
ஆற்றில் மூழ்கிய வாலிபர் உயிரிழந்தார்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் தாமரைச்செல்வன் (வயது 18). இவரும், சேலம் ஜலகண்டபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார்(18) உள்பட 55 பேர், திருவாரூரில் நடந்த இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பஸ்சில் புறப்பட்டு வந்தனர். இந்த பஸ் நேற்று முன்தினம் காலை தஞ்சைக்கு வந்தபோது, பெரியகோவிலை சுற்றி பார்த்து விட்டு மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.
ஆற்றில் மூழ்கிய வாலிபர்
அதன்படி அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கியபோது, தாமரைச்செல்வன், தினேஷ்குமார் உள்ளிட்ட சிலர் மட்டும் பெரியகோவில் அருகே உள்ள புதுஆற்றில் குளித்தனர். ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் தாமரைச்செல்வனும், தினேஷ்குமாரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் தினேஷ்குமாரை தஞ்சை தீயணைப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உயிருடன் மீட்டனர். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தாமரைச்செல்வனை மீட்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
உடல் மீட்பு
கல்லணையில் இருந்து புதுஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரை நிறுத்தி விட்டு தேடிப்பார்த்தும் அவரை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இருள் சூழ்ந்து விட்டதால் நேற்று முன்தினம் மாலை தேடுதல் பணியை தற்காலிகமாக தீயணைப்பு வீரர்கள் ஒத்தி வைத்தனர்.நேற்று காலையில் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினர். இந்தநிலையில் தஞ்சை வண்டிக்காரத்தெரு பகுதியில் செல்லும் புது ஆற்றில் பிணமாக மிதந்த தாமரைச்செல்வன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அஞ்சலி
அங்கு பிரேத பரிசோதனை முடிந்தவுடன் தாமரைச்செல்வன் உடல் பெற்றோர் மற்றும் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சின்னதுரை எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், சேலம் மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா, தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நீலமேகம், ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.