9 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி மதுகுடிக்க வைத்த வாலிபர் கைது
மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி மதுகுடிக்க வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி மதுகுடிக்க வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிறுவனை மதுகுடிக்க வைத்தார்
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியை சேர்ந்த பாபு மகன் அறிவழகன்(வயது 32). இவர் நேற்று முன்தினம் மாலை சித்தர்க்காடு மெயின் ரோடு சிமெண்டு களம் அருகே இருந்து மது குடித்துக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுவன் வீட்டுக்கு நடந்து சென்று உள்ளான். அந்த சிறுவனை அழைத்து மது குடிக்கும்படி அறிவழகன் வலியுறுத்தி உள்ளார். அதற்கு அந்த சிறுவன் மறுத்துள்ளான். ஆனாலும் அந்த சிறுவனை அறிவழகன் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளார்.
பெற்றோர் பதற்றம்
மது குடித்ததால் சிறுவன் தள்ளாடியபடி வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது சிறுவனை பார்த்த பெற்றோர், பதறிப்போய் சிறுவனிடம் விசாரித்து உள்ளனர்.
அதற்கு அந்த சிறுவன் தன்னை அறிவழகன் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்ததாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து அந்த சிறுவனை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
வாலிபர் கைது
இதுகுறித்து சிறுவனின் தந்தை மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.