வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் தலைமறைவு
நாகர்கோவிலில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் தலைமறைவானார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் தலைமறைவானார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கஞ்சா செடி
நாகர்கோவில் இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் காலனியை சோ்ந்தவர் சுதன் (வயது 22), தொழிலாளி. இவர் தனது வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோட்டார் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் சுதன் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் வீட்டில் கஞ்சா செடி எங்கு வளர்கிறது? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டின் பின் பகுதியில் உள்ள சிமெண்டு தொட்டியில் அந்த கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிய வந்தது. அந்த கஞ்சா செடி சுமார் 5 அடி உயரம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பறிமுதல்
இதனையடுத்து கஞ்சா செடியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வீட்டிலேயே சுதன் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.