சிகிச்சைக்கு செல்லாமல் போலீசுக்கு பயந்து பதுங்கிய வாலிபர் சாவு


சிகிச்சைக்கு செல்லாமல் போலீசுக்கு பயந்து பதுங்கிய வாலிபர் சாவு
x
தினத்தந்தி 7 Oct 2022 1:15 AM IST (Updated: 7 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டுவில், அரசு பஸ் டிரைவர் மீது மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு சிகிச்சைக்கு செல்லாமல் போலீசுக்கு பயந்து பதுங்கிய வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

அரசு பஸ் டிரைவர்


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து கிராமத்தை சேர்ந்தவர் புலிகேசி (வயது 50). அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் பணியை முடித்த இவர், இரவு 10.30 மணி அளவில் முசுவனூத்து செல்வதற்காக வத்தலக்குண்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நின்று கொண்டிருந்தார்.


அப்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியை சேர்ந்த லட்சுமணன் (24) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். நிலக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி அவர் சென்று கொண்டிருந்தார்.


மோட்டார் சைக்கிள் மோதல்


வத்தலக்குண்டு அரசு பஸ் பணிமனை அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த புலிகேசி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் புலிகேசி, லட்சுமணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.


இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நின்றிருந்த பஸ்சில் ஏற்றி வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.


பஸ்சில் இருந்து குதித்து ஓட்டம்


வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது போக்குவரத்து நெரிசலில் பஸ் சிக்கியது. பஸ்சில் இருந்தலட்சுமணன் போலீஸ் நிலையத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.


மேலும் தன்னை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடுவார்கள் என்று அவர் அச்சம் அடைந்தார். இதனால் போலீசாருக்கு பயந்து, நின்று கொண்டிருந்த பஸ்சில் இருந்து திடீரென குதித்து பஸ்நிலையத்துக்குள் லட்சுமணன் ஓடினார்.


இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீசார் பஸ்நிலையத்துக்குள் சென்று அவரை தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். தொடர்ந்து அவரை போலீசார் தேடினர்.


பரிதாப சாவு


இந்தநிலையில் பஸ்நிலையத்துக்குள் பூட்டியிருந்த ஒரு கடையின் முன்பகுதியில் உள்ள மறைவான இடத்தில் லட்சுமணன் பதுங்கி கொண்டார். அதேநேரத்தில், விபத்தில் சிக்கிய லட்சுமணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.


போலீசுக்கு பயந்து அவர் அங்கு பதுங்கியதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. இதனால் அந்த இடத்திலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே கடையை திறப்பதற்காக, அதன் உரிமையாளர் நேற்று அதிகாலை அங்கு வந்தார்.


அப்போது தனது கடையின் முன்பு வாலிபர் ஒருவர் ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.


தீவிர சிகிச்சை


அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். விசாரணையில் அங்கு இறந்து கிடந்தது, அரசு பஸ் டிரைவர் புலிகேசி மீது மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு காயம் அடைந்த லட்சுமணன் என்று தெரியவந்தது.


இதனையடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.


இதற்கிடையே விபத்தில் படுகாயம் அடைந்த புலிகேசிக்கு, வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


முறுக்கு கம்பெனியில் வேலை


இந்த சம்பவம் குறித்து வத்தலக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான லட்சுமணன் சத்தீஸ்கர் மாநிலத்தில் முறுக்கு கம்பெனியில் வேலை செய்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர், விபத்தில் சிக்கி சிகிச்சை பெறாமல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story