விவசாயியை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
மானூர் அருகே விவசாயியை வெட்டிக் கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). விவசாயி. இவருடைய மனைவி ஆறுமுகத்தாள். இவரை அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (35) என்பவர் அவதூறாக பேசியுள்ளார். அதனால் ஆறுமுகத்தாளின் கணவர் முருகன் முத்துராமலிங்கத்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகனும், அவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது முத்துராமலிங்கம், முருகனை வழிமறித்து அவதூறாக பேசி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் அவர் மீது நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி குமரகுரு விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட முத்துராமலிங்கத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் கே.சுப்பிரமணியன் ஆஜரானார். இந்த வழக்கை திறம்பட நடத்தி முத்துராமலிங்கத்துக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார்.