பட்டாக்கத்தியால் நண்பரை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது


பட்டாக்கத்தியால் நண்பரை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே மது குடித்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் பட்டாக்கத்தியால் நண்பரை வெட்டிக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே மது குடித்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் பட்டாக்கத்தியால் நண்பரை வெட்டிக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நண்பர்கள்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி கருணாவெளி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜா முருகன். இவரது மகன் கிருஷ்ணராஜ்(வயது 22). கீழ்வேளூர் அருகே ஆழியூர் ஊராட்சி பாமினி தெருவை சேர்ந்த வீரக்குமார் மகன் நவீன்(19).நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கீழ்வேளூர்-ஓர்குடி சாலையில் உள்ள பூலாங்குடி பஸ் நிறுத்தம் அருகில் மது அருந்தி விட்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நவீனிடம், கிருஷ்ணராஜ், நான் சபரிமலைக்கு போன நேரத்தில் என் அம்மாகிட்ட போய் என் அக்காவை பற்றி தவறாக பேசியிருக்கிறாய். என் அம்மாவையும் திட்டி இருக்கிறாய் என்று கேட்டுள்ளார்.

பட்டாக்கத்தியால் வெட்டிக்கொலை

அதற்கு நவீன், நான் அப்படி எதுவும் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது கிருஷ்ணராஜ், தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து நவீன் கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் நவீன் பலியானார். உடனே கிருஷ்ணராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கைது

இது குறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ஜெயசீலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கிருஷ்ணராஜை கைது செய்தனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்திய பட்டா கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story