வியாபாரியை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது


வியாபாரியை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது
x

திண்டுக்கல்லில், வீடு புகுந்து வியாபாரியை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

முறுக்கு வியாபாரி கொலை

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (வயது 46). முறுக்கு வியாபாரி. கடந்த 2-ந்தேதி அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், தூங்கி கொண்டிருந்த அப்துல் லத்தீப்பை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

அப்துல் லத்தீப்பின் அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த அவருடைய மகன் தவ்பிக்கையும் மர்ம நபர் வெட்டிவிட்டு தப்பிவிட்டார். இதையடுத்து அப்துல் லத்தீப், தவ்பிக் ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அப்துல் லத்தீப் பரிதாபமாக உயிரிழந்தார். எனவே தவ்பிக் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வாலிபர் கைது

திண்டுக்கல்லில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் அதே பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் (35) என்பவர், அப்துல் லத்தீப்பை கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் போலீசாரிடம் சிக்கி விடாமல் இருக்க யோகேஸ்வரன் பழனி உள்பட பல ஊர்களுக்கு சென்று பதுங்கியபடி இருந்தார். எனினும் தனிப்படை போலீசார் விடாமல் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதற்கிடையே பட்டிவீரன்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் யோகேஸ்வரன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார், அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story