காதலர் தினத்தில் காதலியை திருமணம் செய்த வாலிபர்
ஆற்காடு அருகே வாலிபர் ஒருவர் காதலர் தினத்தில் தனது காதலியை திருமணம் செய்துகொண்டார்.
திமிரியை அடுத்த பரதராமி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த அன்புமணி மகன் யுவராஜ் என்ற யுவ கணேஷ். இவரும் அதே கிராமத்தில் வசிக்கும் சரவணன் மகள் சந்தியாவும் (21) காதலித்து வந்தனர்.சந்தியாவை திருமணம் செய்வதாக ஆசை காட்டிய யுவகணேஷ் சந்தியாவுக்கு தெரியாமல் காடங்பாடியை அடுத்த அம்முண்டி கிராமத்தை சேர்ந்த 20 வயது பெண்ணை கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொள்ள முயன்றார்.
இதனை அறிந்த சந்தியா திமிரி போலீசில் புகார் மனு கொடுத்தார் அதன் பேரில் யுவராஜை திமிரி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அன்றைய தினம் நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் யுவராஜ் மற்றும் சந்தியாவை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை செய்தனர். இதில் சந்தியா யுவராஜை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். அதற்கு யுவராஜ் சம்மதித்தார்.
இதனையடுத்து காதலர் தினமான நேற்று திமிரி அருகே உள்ள குமரகிரி மலை முருகர் கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் மணக்கோலத்தில் திமிரி போலீஸ் நிலையம் சென்று நாங்கள் திருமணம் செய்து கொண்டதை தெரிவித்தனர். அவர்களை போலீசார் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.காதலியை திருமணம் செய்ய மறுத்தவர் போலீசார் விசாரணைக்கு பின்னர் அவரையே அதுவும் காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்டது அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தது.