இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய வாலிபர் கைது
இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய வாலிபரை நெல்லை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் அழகுக்கலை நிபுணராக உள்ளார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ந்தேதி அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்-அப் மூலமாக தொடர்பு கொண்டு ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி உள்ளார். மேலும் அந்த நபர் ஆபாச வீடியோ கால் செய்யுமாறு வற்புறுத்தி தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவுப்படி நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தியதில், அந்த நபர் தென்காசி மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்த பிரதீப் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து விலை உயர்ந்த ஒரு ஸ்மார்ட் போன், 4 சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து பிரதீப்பிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, பிரதீப் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் ரீல்ஸ் பதிவிடும் இளம்பெண்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவர்களுக்கு அனுப்பி, அவர்களை தனது பாலியல் ஆசைக்கு இணங்கும்படியும், ஆபாச வீடியோ கால் செய்யும்படியும் தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளார். இதுபோல் பல இளம்பெண்களை அவர் மிரட்டியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறுகையில், 'இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சமூக வலைத்தளத்தில் 'பிரேவேசி செட்டிங் எனேபிள்' செய்து வைத்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபர்கள் சமூக வலைத்தளங்களில் அனுப்பும் தகவல்களுக்கு பதில் அனுப்பாதீர்கள். இதுபோல் ஆபாச மிரட்டல்கள் வந்தால் உடனே போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.