மண்டைக்காடு அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது;மற்றொருவரை போலீஸ் தேடுகிறது


மண்டைக்காடு அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது;மற்றொருவரை போலீஸ் தேடுகிறது
x

மண்டைக்காடு அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீஸ் தேடுகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

மண்டைக்காடு அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீஸ் தேடுகிறது.

பெட்ரோல் குண்டு வீச்சு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் அவர்களின் கடைகளை குறி வைத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்ந்து நடைபெற்றன.

இதில் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க. பிரமுகர் வீடு என நினைத்து மண்டைக்காடு அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (வயது 55) என்பவருடைய வீட்டில் கடந்த 24-ந் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

வீடியோ காட்சி மூலம் விசாரணை

அதாவது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த திட்டத்தை நிறைவேற்றி விட்டு தப்பிச் சென்றனர். இதில் வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்த சைக்கிள், ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இந்த செயலில் ஈடுபட்ட 2 மர்மநபர்களும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் பெட்ரோல் குண்டின் திரியில் தீயை பற்ற வைத்து 2 குண்டுகளை அடுத்தடுத்து வீசினார். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

வாலிபர் கைது

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மர்மநபர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்தநிலையில் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குளச்சல் பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், "முதற்கட்ட வழக்கு விசாரணையின் அடிப்படையில் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் வேறு ஏதாவது இயக்கங்களில் சம்பந்தப்பட்டவரா? என தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவர் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்றார்.

போலீஸ் குவிப்பு

முஸ்ஸாமில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஏதேனும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்காக குளச்சல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் கும்பலாக சேர்ந்து திட்டம் தீட்டினார்களா? என்ற ரீதியிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story