பட்டப்பகலில் வீடுபுகுந்து திருட முயன்ற வாலிபர் கைது


பட்டப்பகலில் வீடுபுகுந்து திருட முயன்ற வாலிபர் கைது
x

பள்ளிகொண்டா அருகே பட்டப்பகலில் முன்னாள் ராணுவ வீரரின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

திருட முயற்சி

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த காளபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 58). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் அணைக்கட்டு அடுத்த கவுதமபுரம் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் குடும்பத்தோடு வீட்டை பூட்டிக்கொண்டு சென்றார்.

இந்த நிலையில் பகல் 12 மணிக்கு அவருடைய வீட்டின் இரும்பு கதவை மர்ம நபர் ஒருவர் உடைத்து வீட்டின் உள்ளே சென்றார். அப்போது பக்கத்து வீட்டில் இருந்தவர் இதை பார்த்துவிட்டு திருடன் திருடன் எனக் கூச்சலிட்டார். இதை அறிந்த அந்த நபர் சுவர் மீது ஏறி தப்பி ஓடினார்.

அவரை இளைஞர்கள் பிடிக்க பின் தொடர்ந்து ஓடிய போது, அந்த நபர் ஆயுதங்களை காட்டி மிரட்டியபடி அடர்ந்த காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டான்.

சிக்கினார்

உடனடியாக இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அனைவரும் வேலங்காட்டில் நடந்து வரும் திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்ததால் ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞர்களுடன் மர்ம நபரை தேடி அங்கு பதுங்கி இருந்த நபரை பாலாஜி போலீஸ்காரர் பிடித்தார்.

பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். இது குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கருணாகரன் வந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சித்ராதேவி காம்பவுண்ட் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் முத்துராஜா (வயது 33) என்பது தெரிய வந்தது.

முதல் முறையாக

அவர் கூறுகையில் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் போன் செய்து அவரை அழைத்ததாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி வீட்டை நோட்டமிட்டு முதன் முதலாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது கிராம மக்கள் துரத்தியதைக தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துராஜவை கைது செய்தனர்.


Next Story