வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி வாலிபர் கைது
பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் வாணிவிலாஸ் சிக்னல் பகுதியில் வணிக வளாகங்கள், வியாபார கடைகள், மார்க்கெட், கமிஷன் மண்டிகள் நிறைய உள்ளன. இதனால் பகல் முழுவதும் பரபரப்பாக இயங்கும் பகுதியாக திகழ்கிறது. இங்குள்ள தாடிக்கொம்பு சாலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை செயல்படுகிறது.
இந்த வங்கி கிளை நேற்று காலை வழக்கம் போல் 9 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் முன்பு தூய்மை பணியாளர்கள் சந்திரா, அமலா ஆகியோர் வங்கி அலுவலகம் முழுவதையும் தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டனர்.
வங்கிக்குள் புகுந்த வாலிபர்
காலை சுமார் 9.30 மணிக்கு ஒரு வாலிபர் கையில் பையுடன் வங்கி அலுவலகத்துக்குள் புகுந்தார். அதை பார்த்த தூய்மை பணியாளர்கள், வங்கி ஊழியராக இருக்கலாம் என்று நினைத்தனர்.
மேலும் வங்கி ஊழியர்கள் வரத்தொடங்கி விட்டதாக நினைத்து, பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஆனால் சந்திரா, அமலா ஆகியோர் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்துக்கு அந்த வாலிபர் சென்றார்.
பின்னர் திடீரென கையில் இருந்த மிளகு ஸ்பிரேயை எடுத்து 2 பேரின் முகத்திலும் அடித்தார். இதுமட்டுமின்றி மிளகாய் பொடியையும் முகத்தில் தூவினார். ஸ்பிரே துளிகள் மற்றும் மிளகாய் பொடி ஆகியவை கண்களில் விழுந்ததால் எரிச்சல் தாங்க முடியாமல் 2 பேரும் துடித்தனர்.
நகை மதிப்பீட்டாளர்
உடனே மின்னல் வேகத்தில் செயல்பட்ட அந்த வாலிபர், சந்திரா மற்றும் அமலா ஆகியோரை கட்டிப்போட்டார். மேலும் அவர்கள் சத்தம் போடாமல் இருக்கும்படி மிரட்டினார். பின்னர் 2 பேரையும் வங்கி அலுவலகத்துக்குள் ஒரு ஓரமான இடத்தில் தள்ளிவிட்டார்.
இதற்கிடையே வங்கி ஊழியர்கள் பணிக்கு வரும் நேரம் என்பதால், சுதாரித்து கொண்ட அந்த வாலிபர் வங்கியின் பிரதான வாசலுக்கு அருகே மறைவான இடத்தில் நின்று கொண்டார்.
அடுத்த ஒருசில நிமிடங்களில் நகை மதிப்பீட்டாளர் மோகன்ராஜ் வங்கிக்குள் நுழைந்தார். உடனே மறைந்து நின்று கொண்டிருந்த அந்த வாலிபர், நகை மதிப்பீட்டாளர் மோகன்ராஜின் முகத்திலும் ஸ்பிரே அடித்து மற்றும் மிளகாய்பொடியை தூவினார். மேலும் அவரை கீழே தள்ளிவிட்டு அவருடைய கை, கால்களையும் கட்டிப்போட்டார்.
5 பேரை கட்டி போட்டார்
அதன்பின்னர் மற்றொரு வங்கி ஊழியரான சுந்தரஆரோக்கியசாமி பணிக்கு வந்தார். அவரையும் அந்த வாலிபர் மறைந்து நின்று கொண்டு அவர் முகத்திலும் ஸ்பிரே அடித்து, மிளகாய் பொடியை தூவி கீழே தள்ளிவிட்டு கட்டிப்போட்டார்.
இவ்வாறு அடுத்தடுத்து 4 பேர் முகத்திலும் மிளகு ஸ்பிரே மற்றும் மிளகாய் பொடியை தூவி கயிற்றால் கட்டிப்போட்ட வாலிபர், மறுபடியும் வங்கியின் வாசலுக்கு அருகே வந்து மறைந்து நின்று கொண்டார்.
அப்போது வங்கியின் காசாளர் கருப்புசாமி வங்கிக்குள் நுழைந்தார். அதை பார்த்த வாலிபர், சிறிதும் தாமதிக்காமல் அவர் மீதும் ஸ்பிரே அடித்து மற்றும் மிளகாய் பொடியை தூவி கீழே தள்ளினார். அதோடு 5-வது நபராக அவரையும் கட்டிப்போட்டார்.
தப்பிய காசாளர்
வங்கி காசாளர் உள்பட 5 பேரையும் கட்டிப்போட்ட அந்த வாலிபர், வேறு அலுவலர்கள் யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிட்டபடி மீண்டும் வங்கியின் வாசலுக்கு அருகே மறைந்து நின்று கண்காணித்தார்.
அந்த சமயத்தில் காசாளர் கருப்புசாமி தனது கை, கால்களில் இருந்த கட்டுகளை அசைத்து அவிழ்க்க முயன்றார். அவருடைய முயற்சிக்கு பலனாக கைகளில் கட்டப்பட்டு இருந்த கட்டுகள் லேசாக அவிழத் தொடங்கின. அதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட காசாளர் கருப்புசாமி நைசாக கட்டுகளை அவிழ்த்தார்.
பின்னர் அவர் வங்கிக்கு வெளியே தப்பியோட முயன்றார். அதை பார்த்த அந்த வாலிபர், அவரை தடுத்தார். ஆனால் வாலிபரை கீழே தள்ளிவிட்டு வெளியே தப்பி சென்றார். அதோடு வங்கிக்கு வெளியே காசாளர் நின்றபடி திருடன், திருடன் என சத்தம் போட்டார்.
சுற்றி வளைத்த பொதுமக்கள்
காசாளரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் நின்ற பொதுமக்கள் வங்கிக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு கத்தி, ஸ்பிரே, கம்பி ஆகியவற்றுடன் நின்ற வாலிபரை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் மர்ம நபர் கட்டிப்போட்ட தூய்மை பணியாளர்கள் உள்பட 4 பேரையும் பொதுமக்கள் மீட்டனர்.
இதையடுத்து அந்த வாலிபரிடம், பொதுமக்கள் விசாரித்தபோது அவர் இந்தியில் பேசினார். வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று பொதுமக்கள் நினைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வங்கிக்கு விரைந்து சென்றனர்.
கொள்ளை முயற்சி
மேலும் அங்கு பிடித்து வைத்திருந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கலீல்ரகுமான் (வயது 24) என்பதும், வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கத்தி, கம்பி, ஸ்பிரே, மிளகாய் பொடி, கையுறைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல்லில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.