மனைவியை வெட்டிக்கொல்ல முயன்ற வாலிபர் கைது
சுவாமிமலை அருகே மனைவியை வெட்டிக்கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்.
பாபநாசம்:
சுவாமிமலை அருகே மனைவியை வெட்டிக்கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்.
இரட்டை கொலை வழக்கு
சுவாமிமலை அருகே சோழபுரம் துலுக்கவெளி பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் சக்திவேல் (வயது30). இவருடைய மனைவி அபிநயா(23). கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த குடும்பத்தகராறில் சக்திவேல் தனது தங்கை மற்றும் அவரது கணவரை வெட்டி கொலை செய்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.இந்த இரட்டை கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சக்திவேல், தஞ்சையில் உள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
மனைவிக்கு அரிவாள் வெட்டு
இந்த நிலையில் சக்திவேல் நேற்று மதியம் தேவனாம்சேரியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது அவரது மாமியாருக்கும், மனைவி அபிநயாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சக்திவேல் சண்டையை விலக்கி விட்டுள்ளார். ஆனால் அவர்கள் சண்டையை நிறுத்தாததால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் அபிநயாவை தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்டினார்.
வாலிபர் கைது
இதில் படுகாயம் அடைந்த அபிநயாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுவாமிமலை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.