சிறுமியின் நகையுடன் தப்பி ஓட முயன்ற வாலிபருக்கு தர்மஅடி
சிறுமியின் நகையுடன் தப்பி ஓட முயன்ற வாலிபருக்கு தர்மஅடி விழுந்தது.
பனமரத்துப்பட்டி:
மல்லூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் சிறுமியிடம் குறி சொல்வதாக கூறினான். அப்போது சிறுமி கழுத்தில் இருந்த நகையை கழற்றி தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதனை நம்பி சிறுமி நகையை கழற்றி கொடுத்தார். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதனை கண்ட சிறுமி கத்தி கூச்சல் போட்டார். சிறுமியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை துரத்தி பிடித்து தர்மஅடி கொடுத்து மல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த அர்ஜூனன் மகன் பொன்னுவேல் (வயது 22) என்பது தெரியவந்தது. இவர் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில் உண்டியலை உடைத்து திருடியதும், கோவில் மணியை திருடி சென்று விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொன்னுவேலை கைது செய்தனர்.