லாரியில் பேட்டரி திருட முயன்ற வாலிபர் கைது
நாகையில் லாரியில் பேட்டரி திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வெளிப்பாளையம்:
நாகையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து, வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் ஏற்றி செல்லும் லாரிகளை துறைமுகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.நேற்று முன்தினம் பணி முடிந்து லாரியை நிறுத்தி விட்டு டிரைவர்கள் லாரியிலேயே படுத்து தூங்கி உள்ளனர். அப்போது அருகில் இருந்த லாரியில் இருந்து சத்தம் வருவதை கேட்ட டிரைவர் கோபால் என்பவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது லாரிக்கு அடியில் இருந்த 2 பேர் பேட்டரியை திருட முயற்சி செய்துகொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை கையும் களவுமாக சக டிரைவர்களுடன் சேர்ந்து பிடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மற்றொரு லாரிஉரிமையாளர் முருகானந்தம், பாப்பாக்கோவில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரான மாதவன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்ட பிரவீன் என்பவரை விசாரிப்பதாக கூறி ஒரு காரில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அழைத்துச் சென்ற திருடன் தப்பி ஓடி விட்டதாக கூறினர். இதனால் லாரி உரிமையாளர்களும், டிரைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பிடிபட்ட மற்றொரு நபரை டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை காடம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த மைக்கேல் (வயது24) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.