கள்ளக்காதலியை தேடிவந்த வாலிபர் படுகொலை
கள்ளக்காதலியை தேடி வந்த வாலிபரை பக்கத்து வீட்டில் புகுந்து வெட்டிச்சாய்த்த அப்பெண்ணின் கணவனை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்,
கள்ளக்காதலியை தேடி வந்த வாலிபரை பக்கத்து வீட்டில் புகுந்து வெட்டிச்சாய்த்த அப்பெண்ணின் கணவனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளத்தொடர்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர், கனகராஜ் (வயது 35). தொழிலாளி. இவருடைய மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற அன்பழகனுக்கும் (31) கள்ளத்ெதாடர்பு இருந்ததாகவும், இதனை கனகராஜ் கண்டித்தும் இருவரும் கேட்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
வனவிலங்குகளை வேட்டையாடுதல், கொலை உள்ளிட்ட வழக்குகளில் அன்பழகன் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது. இவர் கடந்த மாதம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
வெட்டிக்கொலை
இந்தநிலையில் கனகராஜ், தன் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
அந்த வீட்டுக்கு அருகே அன்பழகனின் அத்தை வீடு உள்ளது. அன்பழகன், கள்ளக்காதலியை தேடி அங்கு வந்ததுடன், அவரை சந்திக்கவும் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதை அறித்து கனகராஜ் ஆத்திரம் அடைந்தார்.
இரவில் அத்தை வீட்டில்தான் அன்பழகன் படுத்து தூங்கியதை கனகராஜ் உறுதி செய்துகொண்டு, நள்ளிரவில் நைசாக அங்கு புகுந்துள்ளார். தூங்கிக்கொண்டிருந்த அன்பழகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். இதற்கிடையே கனகராஜ் அங்கிருந்து சென்று விட்டார்.
கைது
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் சேத்தூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்பழகனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.