வீட்டில் தனியாக இருந்த காதலியை பார்க்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை


வீட்டில் தனியாக இருந்த காதலியை பார்க்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 12 July 2022 9:35 PM IST (Updated: 12 July 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே வீட்டில் தனியாக இருந்த காதலியை பார்க்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். சாக்குப்பையில் கட்டி உடல் முட்புதரில் வீசப்பட்டது.

திண்டுக்கல்

சாக்குப்பையில் உடல்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணை அருகே முட்புதரில் மர்ம சாக்குப்பை ஒன்று கிடந்தது. அந்த சாக்குப்பையில் ரத்தக்கறையும் படிந்திருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற விவசாயிகள் சிலர், சாக்குப்பையை பார்த்து சந்தேகத்துடன் செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், அந்த சாக்குப்பையை சோதனை செய்தனர்.

மேலும் அந்த பையை திறந்து பார்த்தனர். அதனுள் கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபர் உடல் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதலும், எதிர்ப்பும்

கொலை செய்யப்பட்ட வாலிபர், செம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பழனிசாமி மகன் அழகுவிஜய் (வயது 23). கொத்தனார். இவரும், அதே ஊரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அஜித்குமார் (25) என்பவரும் நண்பர்கள். இதனால் அஜித்குமாரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு அழகுவிஜய் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும், அஜித்குமாரின் 18 வயது தங்கைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

இதையடுத்து காதலர்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் காதலித்து வந்தனர். 2 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர். ஒருகட்டத்தில் 2 பேரின் காதல் விவகாரம் அஜித்குமாருக்கு தெரியவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், தனது தங்கையையும், அழகுவிஜய்யையும் கண்டித்தார். இருப்பினும் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

அடித்துக்கொலை

இந்தநிலையில் அஜித்குமாரின் தாயார் சின்னபொண்ணு ராமேசுவரத்திற்கு சென்றுவிட்டார். இதனால் அன்றைய தினம் இரவு அவரது தங்கை, செல்போனில் தனது காதலன் அழகுவிஜய்க்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் தனியாக இருப்பதாகவும், வீட்டிற்கு சந்திக்க வருமாறும் கூறியுள்ளார். இதையடுத்து அழகுவிஜய், தனது காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு 2 பேரும் தனியாக பேசி கொண்டிருந்தனர்.

இதற்கிடையே அஜித்குமார் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்ததும் காதலர்கள் பேசாமல் திகைத்து போய் நின்றனர். அப்போது அஜித்குமார் தனது தங்கையை வீட்டின் ஒரு அறையில் தனியாக அடைத்து வைத்தார். பின்னர் அழகுவிஜய்யுடன் அவர் தகராறு செய்தார். மேலும் ஆத்திரம் தாங்காத அஜித்குமார், வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையால் அழகுவிஜய்யை சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

புதரில் உடல் வீச்சு

பின்னர் இந்த கொலையை மூடி மறைக்க வேண்டும் என்று அஜித்குமார் திட்டமிட்டார். அதன்படி, அழகுவிஜய்யின் உடலை ஒரு சாக்குப்பையில் வைத்து கட்டி, அதனை தனது மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றார். ஆத்தூர் காமராஜர் அணை பகுதிக்கு சென்ற அவர், அங்கு மறைவாக இருந்த முட்புதருக்குள் சாக்குப்பையுடன் உடலை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதற்கிடையே தனது மகனை காணவில்லை என்று அழகுவிஜய்யின் தந்தை பழனிசாமி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்காத நிலையில் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் சாக்குப்பையில் வாலிபர் உடல் கிடந்தது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த வாலிபர், மாயமான அழகுவிஜய் என்பது தெரியவந்தது.

பின்னர் அழகுவிஜய்யின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

மேலும் வாலிபர் கொலை குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய அஜித்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே அஜீத்குமாரை கைது செய்யக்கோரி, அழகுவிஜய்யின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காதலியை பார்க்க சென்ற வாலிபரை, அந்த பெண்ணின் அண்ணன் அடித்து கொலை செய்து, உடலை சாக்குப்பையில் கட்டி முட்புதரில் வீசி சென்ற சம்பவம் செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story