மது போதையில் ஊராட்சி தலைவர் வீட்டுக்கு சென்று மிரட்டிய வாலிபர்
வடமதுரை அருகே ஊராட்சி தலைவர் வீட்டுக்கு சென்று வாலிபர் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வடமதுரை அருகே உள்ள சிங்காரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் விநாயகன். நேற்று அதிகாலை 5 மணிக்கு இவரை செல்போனில் தொடர்பு கொண்டு வாலிபர் ஒருவர் பேசினார். அப்போது அந்த வாலிபர் தனது வீட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இப்பவே எங்க வீட்டுக்கு வந்து சரி செய்ய முடியுமா? முடியாதா? நான் உங்களுக்கு ஓட்டு போட்டு உள்ளேன் என்று மிரட்டி பேசினார்.
இதையடுத்து அந்த வாலிபர் மது போதையில் விநாயகன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதுடன் அவரை மிரட்டி உள்ளார். அப்போது விநாயகன் அந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டதை செல்போனில் வீடியோ எடுத்தார். மேலும் தன் வீட்டில் பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் தயவுசெய்து சென்று விடுங்கள் என்று கூறியும், அந்த போதை ஆசாமி தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். அப்போது நாங்கள் இந்த ஊரில் வாழ்வது குற்றமா? உங்கள் ஊருக்கு ஊராட்சி மன்ற தலைவராக வந்தது என் குற்றமா? என்று மிகவும் மனமுடைந்து பேசினார். இதற்கிடையே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.