வைக்கோல் கட்டும் எந்திரத்தில் சிக்கி வாலிபரின் கை துண்டானது


வைக்கோல் கட்டும் எந்திரத்தில் சிக்கி வாலிபரின் கை துண்டானது
x

வைக்கோல் கட்டும் எந்திரத்தில் சிக்கி வாலிபரின் கை துண்டானது

தஞ்சாவூர்

தஞ்சை அருகே வைக்கோல் கட்டும் எந்திரத்தில் சிக்கிய வாலிபரின் கை துண்டானது. அவர் கோவை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

19 வயது வாலிபர்

தஞ்சையை அடுத்த உச்சிமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் நவீன்(வயது 19). இவர், நேற்று மதியம் தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை நடுநிலைப்பள்ளி அருகே உள்ள ஒரு வயலில் வைக்கோல் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். எந்திரம் மூலம் வைக்கோல் கட்டும் பணி நடந்தது.

அப்போது திடீரென வைக்கோல் கட்டும் எந்திரத்தில் சணல் சிக்கிக்கொண்டது. அதனை நவீன் எடுக்க முயன்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் நவீனின் இடதுகை சிக்கிக்கொண்டது.

கை துண்டானது

சிறிது நேரத்தில் அவருடைய கை துண்டாகி விழுந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் நவீன் அலறி துடித்தார். இதனை அக்கம், பக்கத்தினர் பார்த்து ஓடி வந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வாண்டையார் இருப்பு பகுதியில் இருந்து 108 ஆம்புலன்சுடன் மருத்துவ உதவியாளர் இளையராஜா, டிரைவர் பூபதிராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அவர்கள் உடனடியாக நவீனையும், துண்டான கையையும் எடுத்துக்கொண்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு தெரிவித்தனர்.

கோவைக்கு அனுப்பப்பட்டார்

அதன்பேரில் துண்டான கையுடன், நவீன் ஆம்புலன்சு மூலம் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவங்கு அவருக்கு துண்டான கையை பொருத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story