வத்தலக்குண்டு அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா; 3 ஆயிரம் ஆடுகள் பலியிட்டு வழிபாடு


வத்தலக்குண்டு அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா; 3 ஆயிரம் ஆடுகள் பலியிட்டு வழிபாடு
x

வத்தலக்குண்டு அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் 3 ஆயிரம் ஆடுகள் பலியிட்டு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் கண்மாய் கரையோரத்தில் கோட்டை கருப்பணசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி கருப்பணசாமி கோவிலில், ஆடிமாத திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி இரவு 7 மணிக்கு முதல் கட்டபூஜையுடன் திருவிழா ெதாடங்கியது. அதன்பிறகு ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக நேர்ந்து விட்டிருந்த ஆடுகள் கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு கட்டப்பட்டிருந்தன.

பின்னர் அந்த ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக பலியிடப்பட்டன. மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. அதன்பிறகு நள்ளிரவு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து விடிய, விடிய ஆட்டு இறைச்சி சமைக்கப்பட்டு அதிகாலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். பெண்கள் பங்கேற்க அனுமதியில்லை.

திருவிழாவுக்காக கிராம மக்கள் 15 நாட்கள் கடும் விரதம் இருந்தனர். விராலிப்பட்டியில் உள்ள ஊர்கோவில், சோத்து சாமி கோவில் ஆகியவற்றுக்கு சென்று பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story