தற்காலிக பாதை அமைத்து தர வேண்டும்


தற்காலிக பாதை அமைத்து தர வேண்டும்
x

தற்காலிக பாதை அமைத்து தர வேண்டும்

நாகப்பட்டினம்

திருமருகல் அருகே புதிய பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் தற்காலிக பாதை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தரைப்பாலம்

திருமருகலில் இருந்து மானாம்பேட்டை செல்லும் மேலவாய்க்கால் வடிகால் சியாத்தமங்கை-மானாம்பேட்டை இடையே பட்டினத்தார் வாய்க்காலில் இணையும் இடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் ஒன்று இருந்தது. இந்த தரைப்பாலம் வழியே மானாம்பேட்டை, சேஷமூலை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் திருமருகல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வர பயன்படுத்தி வந்தனர்.

இடிந்து விழுந்தது

மேற்கண்ட பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் திருமருகல் அரசு பள்ளிக்கு செல்ல இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் திருமலைராஜன்பட்டினத்திற்கு பாசனத்திற்காக பட்டினத்தார் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு கரைகளை தொட்டு சென்றது.

இதனால் சாலையோரம் அரிப்பு ஏற்பட்டு மேல வாய்க்கால் வடிகாலில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து இடிந்து விழுந்தது.

தற்காலிக பாதை

இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விபத்துக்கள் ஏற்படும் என்ற அச்சத்துடன் பாலத்தை கடந்து சென்று வந்தனர். தற்போது பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கி இதுவரை அந்த வாய்க்காலை கடந்து செல்ல தற்காலிக பாதை இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்காக தற்காலிக பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story