பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; பெண் உள்பட 3 பேர் பலி


சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.

பட்டாசு ஆலையில் விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை (வயது 65). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மாரனேரி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்தது. நாக்பூர் உரிமம் பெற்றுள்ள இந்த பட்டாசு ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இதில் சுமார் 50 தொழிலாளர்கள் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பட்டாசு ஆலையில் தரைசக்கரம், பூந்தொட்டி, அணுகுண்டு போன்றவை தயாரிக்கப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி அளவில் தரைசக்கரம் தயாரிக்கப்பட்ட அறையில் மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றியது. இதனால் அவைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதில் அந்த அறையில் பணியாற்றி கொண்டு இருந்த எம்.துரைச்சாமிபுரத்தை சேர்ந்த குமரேசன்(30), பள்ளப்பட்டி இந்திராநகரை சேர்ந்த சுந்தர்ராஜ் (27) ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தின் போது அருகில் நின்று கொண்டிருந்த சிவகாசி ரிசர்வ்லைன் சிலோன் காலனியை சேர்ந்த கருப்பையா மனைவி அய்யம்மாள் (70), சுந்தர்ராஜ் மனைவி இருளாயி (45) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

வெடிச்சத்தம்

வெடி விபத்து நடந்த போது 10 கி.மீ. தூரத்துக்கு வெடிச்சத்தம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஊராம்பட்டி கிராம மக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கும், மாரனேரி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனசெயன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.

விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தொழிலாளர்களை இன்ஸ்பெக்டர் சுபகுமார் மற்றும் போலீசார் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேர் பலி

குமரேசன், சுந்தர்ராஜ் ஆகியோருக்கு டாக்டர் அய்யனார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் தலையில் காயம் அடைந்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி பெற்ற அய்யம்மாள் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சைக்கு அனுமதித்த சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார். இருளாயி சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலையின் போர்மென் காளியப்பனை (49) கைது செய்தனர். ஆலையில் பட்டாசு உற்பத்தியின் போது விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து சிவகாசி தாசில்தார் லோகநாதன், பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை ஆய்வு தனி தாசில்தார் ஸ்ரீதர் ஆகியோர் விசாரணை நடத்தினர். வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலைக்கு மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிவபிரசாத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story