அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 5 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து


அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 5 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
x

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அம்பத்தூர்,

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, மங்களபுரத்தில் மைதா, கோதுமை மாவு தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ளது. 5 அடுக்குமாடிகள் கொண்ட இந்த தொழிற்சாலை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ளது.

தற்போது இந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 5 அடுக்குமாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென 5 மாடிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்பத்தூர் எஸ்டேட், ஜெ.ஜெ.நகர், ஆவடி உள்ளிட்ட இடங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எழும்பூரில் உள்ள தீயணைப்புத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டு நள்ளிரவு வரையிலும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

தீ விபத்து காரணமாக சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது. தீ விபத்து குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story