செங்குன்றம் அருகே குடோனில் பயங்கர தீ விபத்து
செங்குன்றம் அருகே குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலவாயில் பகுதியில் சென்னையைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கு சொந்தமான குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் மருந்து பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு, இங்கிருந்து சென்னை முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி குடோனில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது.
இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.