பேன்சி கடை கிடங்கில் பயங்கர தீ விபத்து


பேன்சி கடை கிடங்கில் பயங்கர தீ விபத்து
x

அருமனை அருகே பேன்சி கடை கிடங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

கன்னியாகுமரி

அருமனை:

அருமனை அருகே பேன்சி கடை கிடங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

நோட்டு-புத்தகங்கள்

அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடு சந்திப்பில் வில்சன் என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் இடவசதி குறைவாக உள்ளதால் முதல் மாடியில் கிடங்கு அமைத்துள்ளார். தற்போது பள்ளிக்கூடம் திறக்க உள்ளதால் மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகம் உள்பட ஏராளமான பொருட்களை வாங்கி கிடங்கில் சேமித்து வைத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று மதியம் முதல் மாடியில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து பொருட்கள் எரிந்து பயங்கர புகை மூட்டம் வந்தது. இதைபார்த்த பக்கத்து கடைக்காரர்கள் வில்சனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் முதல் மாடியில் ஏறி தீயை அணைக்க முயன்றார். ஆனால், தீ மள...மள...வென எரிந்து அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியதால் மாடிக்கு செல்ல முடியவில்லை.

ரூ.10 லட்சம் சேதம்

இதுகுறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து தகவல் அறிந்த அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும், மின்கசிவால் தீ பிடித்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொரோனா காலத்தில் வியாபாரம் இல்லாததால் பெரும் இழப்பை சந்தித்து கடை உரிமையாளர் வில்சன், தற்போது மிகவும் சிரமத்துடன் வியாபாரத்தை செய்து வந்தார். இந்த நிலையில் கிடங்கில் தீ பிடித்த சம்பவம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story