தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
குடியாத்தம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
தீ விபத்து
குடியாத்தத்தை அடுத்த கீழ்செட்டிகுப்பம் கிராமத்தில் தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் தென்னை நார் தொழிற்சாலையில் எந்திரங்கள் அமைந்துள்ள பகுதியில் திடீரென தீப்பற்றி அருகில் இருந்த தென்னை நாரிலும் தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இது குறித்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ நாலாபக்கமும் பரவியது. அதைத்தொடர்ந்து பேரணாம்பட்டில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரூ.25 லட்சம் பொருட்கள் நாசம்
தகவல் அறிந்ததும் வேலூர் கோட்டை தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி, உதவி கோட்ட தீயணைப்பு அலுவலர் பழனி உள்ளிட்டோர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் எந்திரங்கள், தென்னை நார் உள்ளிட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.