நண்பருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த கொள்ளையன்
கருங்கல் தேங்காய் கடையில் திருடிய ரூ.5 லட்சம் பணத்தில் ஒரு லட்சம் ரூபாயில் நண்பனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த கொள்ளையன் பற்றிய பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.
கருங்கல்:
கருங்கல் தேங்காய் கடையில் திருடிய ரூ.5 லட்சம் பணத்தில் ஒரு லட்சம் ரூபாயில் நண்பனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த கொள்ளையன் பற்றிய பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.
போலீசார் விசாரணை
கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் கொள்ளை சம்பவங்கள், திருட்டுகள், வழிப்பறி, பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற தொடர் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கருங்கல் போலீஸ் நிலைய ஏட்டுகள் முருகன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் கருங்கல் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தூங்கிக் கொண்டிருந்த நபரை தட்டி எழுப்பினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ரூ.5 லட்சம் திருடிய ஆசாமி
விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த சிவ கிருஷ்ணன் மகன் விஜயன் என்ற யாத்ரா விஜயன் (வயது 48) என்று தெரியவந்தது. அவர் கருங்கல் தேங்காய் கடையில் ரூ.5 லட்சத்தை திருடியவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், திருடிய பணத்தில் ரூ.2 லட்சத்தை தன்னிடமிருந்து மர்ம ஆசாமி ஒருவர் திருடிச்சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மீதி இருந்த பணத்தை நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த 39 வயதான தனது நண்பருக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
நண்பருக்கு மோட்டார் சைக்கிள்
அதில் ஒரு லட்சம் ரூபாயில் அவருக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்ததாகவும் போலீசாரிடம் விஜயன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் சென்ற போலீசார் விஜயனின் நண்பரையும், அவரது மனைவியையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.3 லட்சம் பணத்தை விஜயன் தங்களிடம் கொடுத்ததாகவும், அதில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்ததாகவும், அந்த மோட்டார் சைக்கிள் ஒரு வழக்கு நிமித்தமாக மானூர் போலீஸ் நிலையத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தங்களிடம் இருக்கும் மீதி பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பதாக கூறி அந்த பணத்தை ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் விடுவித்தனர். கொள்ளையன் விஜயன் சிறையில் அடைக்கப்பட்டான்.