ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்தன
பந்தலூரில் பலத்த மழையால் ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்தன.
பந்தலூர்
பந்தலூர் அருகே பிதர்காடு, பாட்டவயல், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. ஆணையப்பன் சோலை, அய்யன்கொல்லி, மூலைக்கடை பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரம் விழுந்தன. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சரிசெய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செருகுன்னு பகுதியில் ராமச்சந்திரன் என்பவரது வீட்டின் மீத மரம் விழுந்தது. இதில் மேற்கூரை சேதமடைந்தது. அதே பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்தன. குலை தள்ளி அறுவடைக்கு தயாரான வாழைகள் சாய்ந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். பந்தலூர் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.