பத்துகாணி பகுதியில் 4 ஆடுகளை கடித்து கொன்ற புலி


பத்துகாணி பகுதியில் 4 ஆடுகளை கடித்து கொன்ற புலி
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பேச்சிப்பாறை அருகே வனப்பகுதியில் பதுங்கி இருந்த புலி 16 நாட்களுக்கு பிறகு மீண்டும் பத்துகாணி பகுதியில் புகுந்து தனது அட்டகாசத்தை தொடங்கி உள்ளது. அங்கு தொழிலாளர்கள் வளர்த்து வந்த 4 ஆடுகளை கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

பேச்சிப்பாறை அருகே வனப்பகுதியில் பதுங்கி இருந்த புலி 16 நாட்களுக்கு பிறகு மீண்டும் பத்துகாணி பகுதியில் புகுந்து தனது அட்டகாசத்தை தொடங்கி உள்ளது. அங்கு தொழிலாளர்கள் வளர்த்து வந்த 4 ஆடுகளை கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குடியிருப்பில் புகுந்த புலி

குமரி மாவட்டம் களியல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பேச்சிப்பாறை அருகே உள்ள சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பில் கடந்த மாதம் 3-ந் தேதி புலியின் நடமாட்டம் தொடங்கியது. அந்தப்புலி தொழிலாளர்கள் வளர்த்து வந்த ஆடுகள் மற்றும் பசுமாடுகளை அடித்து தின்று வந்தது. இதைப்போல் அருகில் உள்ள மல்லமுத்தன்கரை, மூக்கறைக்கல் ஆகிய பழங்குடியினர் குடியிருப்புகளிலும் புகுந்து ஆடுகளை அடித்து கொன்று வந்தது. கடைசியாக கடந்த மாதம் 21-ந் தேதி குறத்திமலையில் ஒரு பசுமாட்டை தாக்கியது.

இதற்கிடையே புலியை பிடிக்க வனத்துறையினர் இந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்தும் 2 இடங்களில் கூண்டுகளும் வைத்தனர். மேலும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் டாக்டர்கள் குழுவும், காட்டுக்குள் புலியைத் தேடிப் பிடிக்கும் சிறப்பு பயிற்சி பெற்ற எலைட் படையினரும் களம் இறக்கப்பட்டனர். ஆனால் புலி பிடிபடவில்லை. அதே நேரத்தில் புலி தனது நடமாட்டத்தை குறைத்துக் கொண்டது. கடைசி கட்டமாக காட்டுக்குள் டிரோன் கேமராக்கள் மூலம் புலியை தேடும் பணியும் நடந்தது. இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து புலியை பிடிக்கும் சிறப்புப் படையினர் கடந்த மாதம் 28-ந் தேதி தற்காலிகமாக தேடும் பணிகளை நிறுத்தி விட்டு முகாம்களுக்கு திரும்பினர். அதே வேளையில் சிற்றாறு குடியிருப்பில் கூண்டு வைத்து புலியை பிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தது.

மீண்டும் அட்டகாசம்

இந்தநிலையில் கடந்த 16 நாட்களாக காட்டுக்குள் அமைதியாக இருந்த புலி மீண்டும் வெளியே வந்து தனது அட்டகாசத்தைத் தொடங்கியுள்ளது. அதாவது நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் சிற்றாறு குடியிருப்புப் பகுதியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள பத்துகாணி ஒருநூறாம்வயல் பழங்குடி குடியிருப்பில் புலி புகுந்தது. இங்கு தொழிலாளி ராதாகிருஷ்ணன் (வயது38) தனது வீட்டின் அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2 ஆடுகளை அந்த புலி கடித்துக் குதறியது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் சத்தம் போட்டதும் புலி அங்கிருந்து ஓடியது. இந்த சம்பவத்தில் 2 ஆடுகளும் இறந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.

இதற்கிடையே புலி அருகிலுள்ள மற்றொரு தொழிலாளி பினுகுமார் (35) என்பவர் வீட்டின் அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2 ஆடுகளை கடித்து கொன்றது. அத்துடன் ஒரு ஆட்டை கடித்து சற்று தூரம் இழுத்து கொண்டு போட்டு விட்டு சென்றுள்ளது. அந்த இடங்களுக்கும் வனத்துறையினர் வந்து இறந்த ஆடுகளை பார்வையிட்டனர்.

மாவட்ட வன அதிகாரி

இந்தநிலையில் நேற்று காலையில் மாவட்ட வன அதிகாரி இளையராஜா சம்பவ இடத்திற்கு வந்து ஆடுகளை பறிகொடுத்த பழங்குடியினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் புலியை பிடிக்க வனத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். ஆடுகளை இழந்த 2 பழங்குடி தொழிலாளர்களுக்கு ஒரு ஆட்டுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் இழப்பீடு வழங்கினார்.

கடந்த 16 நாட்களாக புலியின் அட்டகாசம் இல்லாமல் இருந்ததால் பழங்குடி மக்களும், ரப்பர் கழக தொழிலாளர்களும் சற்று நிம்மதியாக இருந்தனர். இந்தநிலையில் புலி மீண்டும் தனது அட்டகாசத்தை தொடங்கியுள்ளதால் பழங்குடி மக்களும், ரப்பர் தோட்ட தொழிலாளர்களும் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே புலியை எப்படியாவது வனத்துறையினர் பிடித்து விட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story