தேவர்சோலை அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற புலி-பொதுமக்கள் அச்சம்
தேவர்சோலை அருகே புலி தாக்கி பசுமாடு பலியானது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.
கூடலூர்
தேவர்சோலை அருகே புலி தாக்கி பசுமாடு பலியானது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.
பசுமாட்டை இழுத்துச் சென்ற புலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை புலிகள் ஊருக்குள் அடிக்கடி வருகிறது. இந்த நிலையில் தேவர் சோலை அருகே 3 டிவிஷன் பகுதியைச் சேர்ந்தவர் சம்சு. இவர் தனது வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு கால்நடைகளை அவிழ்த்து விட்டார்.
அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் கரையோரம் பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தது. பகல் ஒரு மணி அளவில் மாட்டின் அலறல் சத்தம் கேட்டது. சுமார் 200 மீட்டர் தொலைவில் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கு ஓடோடி வந்து பார்த்தனர். அப்போது புலி ஒன்று பசு மாட்டை அடித்துக் கொன்று இழுத்து செல்வதை கண்டனர். இதனால் அச்சம் அடைந்த தோட்ட தொழிலாளர்கள் சத்தம் போட்டபடி ஓடி வந்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
இதைக்கண்ட புலி பசு மாட்டின் உடலை அங்கே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அந்தப்பகுதியில் கேமராக்களை பொருத்தி கண்காணிக்க முடிவு செய்தனர்.
மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து கூடலூர் உதவி வன பாதுகாவலர் கருப்பையா கூறும்போது, குறிப்பிட்ட இடத்தில் கேமராக்களை பொருத்தி கண்காணிக்கப்படும். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பசுமாட்டை புலி அடித்துக் கொன்ற சம்பவத்தால் அந்தப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளார்கள்.