புல் தரையில் படுத்து ஓய்வு எடுத்த புலி
முதுமலை வனப்பகுதியில் புல்தரையில் படுத்து ஓய்வு எடுத்த புலியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
கூடலூர்
முதுமலை வனப்பகுதியில் புல்தரையில் படுத்து ஓய்வு எடுத்த புலியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
புலி நடமாட்டம்
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் முதுமலையில் சவாரி வாகனம் மூலம் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அழைத்து செல்கின்றனர். இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. பெரும்பாலும் புலியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வருகின்றனர்.
ஆனால், கடந்த காலங்களில் புலி நடமாட்டம் மிக அரிதாகவே இருந்து வந்தது. இதனால் முதுமலை வனப்பகுதியில் சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை காணப்பட்டது. மேலும் பலர் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை மட்டும் கண்டு செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக முதுமலை வனம் மற்றும் அதன் சாலையோரம் புலிகள் நடமாட்டம் அதிகளவு காண முடிகிறது.
புல்தரையில் ஓய்வெடுத்தது
நேற்று முன்தினம் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து வனத்துறையின் சவாரி வாகனத்தில் கோவையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலரை வனப்பகுதிக்குள் வன ஊழியர்கள் அழைத்து சென்றனர். அப்போது கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள புல்தரையில் ஆண் புலி ஒன்று படுத்துக் கிடந்தது. இதைக்கண்ட வன ஊழியர்கள் சவாரி வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு காண்பித்தனர்.
மேலும் புலி உடனடியாக அங்கிருந்து சென்று விடும் என எதிர்பார்த்தனர். ஆனால், புலி நீண்ட நேரமாக படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இதை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர். பின்னர் புலி அங்கிருந்து சென்றது. அதுவரை சுற்றுலாப் பயணிகள் புலியை கண்டு ரசித்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, புலியை காண்பது அரிது. ஆனால், நீண்ட நேரமாக புல் தரையில் படுத்து கிடந்து விளையாடிய காட்சி அபூர்வம். இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.