பொதுமக்கள் நடைபாதையை ஆக்கிரமித்த வியாபாரி
பொதுமக்கள் நடைபாதையை ஆக்கிரமித்த வியாபாரி
களியக்காவிளை:
களியக்காவிளை மீன்சந்தை அருகே ரூ.1.5 கோடியில் காய்கனி சந்தைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த டிசம்பர் 30-ந்தேதி அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். அதைதொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சந்தையில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக புதிய கட்டிடத்தில் சந்தை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பஸ்நிலையத்தையொட்டி சந்தைக்கு செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து கரும்பு விற்பனை நடைபெற்றது. இதுபற்றி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பேரூராட்சி தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பென்னட்ராஜ், செயல் அலுவலர் வி.சி.ரெமாதேவி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அங்கு வந்து நடைபாதையை ஆக்கிரமித்து விற்பனைக்கு ைவத்திருந்த கரும்புகளை அகற்ற வியாபாரியிடம் கூறினர். இதனால் அந்த வியாபாரிக்கும் பேரூராட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து பேரூராட்சிப் பணியாளர்கள் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த கரும்பு கட்டுகளை அங்கிருந்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.