ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்ற வியாபாரி
கடலூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு வியாபாரி விற்றார். இதை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.
கடலூர் முதுநகர்,
தக்காளி விலை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கேரட் போன்றவற்றின் விலை சதத்தை கடந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலூரை பொறுத்தவரை ஒரு கிலோ தக்காளி ரூ.92 முதல் ரூ.105 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிலோக்கணக்கில் வாங்கிய தக்காளியை கிராம் அளவில் பொதுமக்கள் வாங்க தொடங்கி விட்டனர். இந்த விலை ஏற்றம் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தக்காளி ரூ.20-க்கு விற்பனை
இந்தநிலையில் கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் நேற்று தக்காளி கிலோ ரு.20 என விலைப்பட்டியல் தொங்கவிடப்பட்டு விற்கப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தக்காளியை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். நபர் ஒருவருக்கு 1 கிலோ வீதம் வழங்கப்பட்டது.
இது பற்றி கடை உரிமையாளர் ராஜேஷிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
சேவை மனப்பான்மையுடன்...
தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் கடை வரை வந்து விலையை கேட்டு விட்டு செல்கின்றனர். சில வாடிக்கையாளர்கள் 2, 3 கிலோ தக்காளியை வாங்கியவர்கள், தற்போது ½ கிலோ வாங்குகிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து 600 கிலோ தக்காளியை வாங்கி வந்தேன். ஒரு கிலோ 60 ரூபாய் என்று வாங்கினேன். அதை மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் ரூ.20-க்கு விற்பனை செய்கிறேன். அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஒருவருக்கு 1 கிலோ மட்டுமே வழங்குகிறேன். விற்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தக்காளி அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது என்றார்.