லாரி மோதி உடைந்து விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பம்
வேடசந்தூரில் லாரி மோதி ேபாக்குவரத்து சிக்னல் உடைந்தது.
வேடசந்தூரில் திண்டுக்கல் சாலையில் நேற்று முன்தினம் இரவு டேங்கர் லாரி ஒன்று வேகமாக பின்னோக்கி வந்தது. அப்போது ஆத்துமேடு, நான்கு சாலை சந்திப்பில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மீது அந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் சிக்னல் கம்பம் உடைந்து சாலையில் விழுந்தது. மேலும் சிக்னல் கம்பத்தில் இணைக்கப்பட்டு இருந்த மின்சார வயர்கள் அறுந்து சாலையின் குறுக்கே விழுந்தன. அந்த சமயத்தில் அங்கு யாரும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையே சிக்னல் கம்பத்தின் மீது மோதிய டேங்கர் லாரியை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் அறுந்து கிடந்த மின்சார வயர்களை அப்புறப்படுத்தினர். சாலையில் முறிந்து விழுந்த சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் சிக்னல் கம்பத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.