புளியங்குடி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; போலீஸ் ஏட்டு பரிதாப சாவு
புளியங்குடி அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் போலீஸ் ஏட்டு இறந்தார். மற்றொரு போலீஸ்காரர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்
கடையநல்லூர்:
புளியங்குடி அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் போலீஸ் ஏட்டு இறந்தார். மற்றொரு போலீஸ்காரர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
போலீஸ் ஏட்டு
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் இருமன்குளத்தைச் சேர்ந்த சுந்தரையா (வயது 50).
புளியங்குடி போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் மருதுபாண்டியன் (38). சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அரவிந்தன் (35).
இவர்கள் 3 பேரும் நேற்று மாலை 2 மோட்டார் சைக்கிள்களில் புளியங்குடியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சுந்தரையாவும், மருதுபாண்டியனும் ஒரு மோட்டார்சைக்கிளிலும், அரவிந்தன் மற்றொரு மோட்டார்சைக்கிளிலும் சென்று கொண்டிருந்தனர்.
கார் மோதியது
புளியங்குடி மின்வாரியம் அலுவலகம் அருகில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து சுந்தரையா கீழே விழுந்தார்.
அப்போது சுந்தரையாவின் தலையில் காரின் டயர் ஏறியதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் மருதுபாண்டியன், அரவிந்தன் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.
சாவு
உடனே பொதுமக்கள் அங்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுந்தரையா மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த ராஜாமணி மகன் கார்த்திக் (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த சுந்தரையாவிற்கு மனைவி மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.